இதுக்குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கோடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை 90 நாட்களில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தபோது, இவர்களுக்கும் உண்மை தெரிந்திருக்குமோ என்று மக்கள் நம்பினார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இந்த விசாரணையைக் கிடப்பில் போட்டு வைத்துள்ளதன் மூலம், இவர்கள் யாரையோ காப்பாற்றுகிறார்களோ? என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் சட்டப்பேரவையில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் எனப் பேசிய திரு.ஸ்டாலின் அவர்கள் இன்று வரை அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தாதது ஏன்? யாருக்கோ உதவும் நோக்கில் விசாரணையைக் கிடப்பில் போட்டுள்ளதாக மக்கள் மத்தியில் எழுந்துள்ளசந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் விசாரணையை மேம்போக்காக நடத்திவரும் தி.மு.க. அரசைக் கண்டித்து நம் உள்ள உணர்வுகளை இந்தஆர்ப்பாட்டத்தின் மூலம் நாம் வெளிப்படுத்தினோம்.
உண்மையான அச்சாணி தொண்டர்கள் தான் :
தேனி மாவட்டத்தில் நண்பர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் இணைந்து நானும் தி.மு.க. அரசிற்கு கண்டனத்தைப் பதிவு செய்தோம். அதுபோலவே தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் கண்டன முழக்கங்களைஎழுப்பியிருக்கிறோம். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொண்டர்கள் ஓரணியாக ஒன்று பட்டு நிற்கவேண்டும் என்ற நமது உணர்வும், ஒன்றுபட்டால் உறுதியாக வெல்லலாம் என்ற திரு.ஓ.பன்னீர்செல்வம்
அவர்களது உணர்வும், ஒன்று சேர்ந்து உண்மைத் தொண்டர்களை அரவணைத்து, முதல் நிகழ்வாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. இன்று நாம் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்ற உடனேயே, அ.தி.மு.க.வை அபகரித்து வைத்திருக்கும் சுயநலக் கும்பலிடமிருந்து அதிகாரப்பூர்வ குரல் ஒன்று வெளிப்பட்டது. அவர் அச்சாணிப் பற்றியெல்லாம் பழமொழியாக நேற்றைய தினம் உளறியிருந்தார். உண்மையில், ஒரு இயக்கத்தின் அச்சாணி என்பது உண்மையான தொண்டர்கள்தான். பணத்துக்கும், பதவிக்கும் விலைபோகாமல் இறுதிவரை உறுதியுடன் நிற்கும் எண்ணம் கொண்ட அந்த உண்மைத் தொண்டர்களே அச்சாணி.
இது புரியாதவர்கள், உண்மை, நேர்மை, விசுவாசம் என்று எதையும் அறியாதவர்கள், துரோகத்தையே சுவாசமாக கொண்டவர்கள் அச்சத்தில் வாய்க்கு வந்ததை உளறத்தான் செய்வார்கள். அவர்கள் பேசுகிறார்கள் என்றாலே நம்முடைய நேர்மையான செயல் அவர்களை உறுத்துகிறது என்றுதான் அர்த்தம். விசுவாசம் என்றாலே என்னவென்று தெரியாத துரோக சிந்தனையாளர்களின் கருத்துக்களை புறக்கணிப்போம். பணம், பதவி மட்டுமே பிரதானம் என்று நினைப்பவர்கள், கால வெள்ளத்தில் காணாமல் போவார்கள் என்பது மட்டும் நிச்சயம். அதனால், நாம் அடைய வேண்டிய இலக்கையும், சாதிக்க வேண்டிய சாதனையையும் மட்டுமே மனதில் நிறுத்தி நமது பயணத்தை தொடருவோம். மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை மீண்டும் அமைத்திட, அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் கரம் கோர்த்து அடுத்தடுத்த களங்களுக்கு ஆயத்தமாவோம்.
தீவிரமாக விசாரணையை மேற்கொள்ளவேண்டும் :
கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் என்பது புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களை மனரீதியாக பாதித்திருக்கும் நிகழ்வு. இந்த விஷயத்தில் காவல்துறையை கையில் வைத்துள்ள தி.மு.க. அரசு தீவிரமாக விசாரணையை மேற்கொள்ளவேண்டும். கொலை, கொள்ளை அதனை தொடர்ந்து நடைபெற்ற தற்கொலை மற்றும் விபத்திற்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்றுத்தரவேண்டும். இல்லையேல், குற்றவாளிகளுடன் பேரம் பேசி அவர்களை காக்க தி.மு.க. அரசு முயல்கிறதோ என்ற மக்களின் கருத்தை தி.மு.க. சுமக்க வேண்டியதிருக்கும் என எச்சரிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
