முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் : இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஆற்றில் மூழ்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்களின் மகன் திரு. வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் திரு.
மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி : வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “பெற்ற மகனை இழந்து வாடும் அன்புச் சகோதரர் திரு. சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும். எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், வெற்றி துரைசாமி அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அளிக்க, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் – அமமுக பொதுச்செயலாளர் : இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியில் மாயமான திரு.வெற்றி துரைசாமி அவர்களின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கபட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
வெற்றி துரைசாமி அவர்களை இழந்து வாடும் அவரின் தந்தை திரு.சைதை துரைசாமி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். –
சசிகலா : தென்சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான திரு.சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் வாகன விபத்து ஏற்பட்டு சட்லஜ் நதியில் விழுந்து காணாமல் போய் 8 நாட்களாக தேடி வந்த நிலையில், தற்போது அவர் இறந்துவிட்டார் என்றும், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
அன்பு சகோதரர் திரு. சைதை துரைசாமி அவர்கள் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். எங்கள் இயக்கத்தின் நலனுக்காக அயராது பாடுபட்டவர். தனது மகனை இழந்த இந்த கடினமான நேரத்தில் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியையும், மன வலிமையையும் கொடுக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
தனது மகனை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
கமலஹாசன் : சென்னையின் முன்னாள் மேயர், நண்பர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது.
வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம்.
மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன். அவர் விரைவில் இத்துயரிலிருந்து மீள வேண்டும்.
ஓபிஸ் : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான அன்புச் சகோதரர் திரு. சைதை ளு. துரைசாமி அவர்களின் மகன் திரு. வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
மகனை இழந்து தவிக்கும் அன்புச் சகோதரர் துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகனின் இழப்பினைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அன்புச் சகோதரர் திரு. சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அளிக்க எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பிரேமலதா விஜயகாந்த் : வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. வெற்றியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார்.