இன்று தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பல பரிமாணங்களை அடைந்துள்ளதை நம் கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம் சுமார் 5 முதல் 10 வருடத்திற்கு முன் பாடலைக் கேட்க பென்ட்ரைவ், சிடி என்ற பொருளை பயன்படுத்தி பாடலை கேட்டு மகிழ்ந்தோம். இதன் அடுத்தகட்ட நகர்வாக இன்று மென்பொருள் (ஆப்) பயன்படுத்தி எளிதாக பாடலை கேட்கும் வசதிகள் நமக்கு கிடைத்துள்ளது. பல பரிமாற்றங்களை நாம் பெற்றாலும் அன்று டேப் ரிகார்டரை பயன்படுத்தி கேசட் மூலம் கேட்கும் மகிழ்ச்சி எண்ணில் அடங்காதது. அதில் ஒரு வகையான சுகம் இருப்பதை அதில் பாடல்களைக் கேட்டவர்களை ம(ற)றுக்க முடியாது.
அந்த எண்ணில் அடங்கா மகிழ்ச்சியை திரும்பி பார்க்கவே (பிளாஷ்பக்) இந்த கட்டுரை! இன்று படத்துக்கு பாடல்கள் கட்டாய அவசியம் இல்லை என்ற நிலை சினிமாவில் தொடர்ந்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் பாடல்களே இல்லாத பல திரைப்படங்கள் வெளியாகி யுள்ளதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் அன்று அப்படி இல்லை படத்துக்கு இணையாக பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்து இருக்கும் பாடல்கள் ஒன்றிருக்கும். ஒரு திரைப்படம் வெளியாக ஒரு மாதத்துக்கு முன்பு ஆடியோ கேசட் வெளிவிடும். நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் வீட்டில் இருந்தது சிறிய டேப் ரிகாடர் (படத்தில்
குறிப்பிட்டுள்ளது போல).
ஒரிஜினல் – டூப்ளிகேட் :
ஒரு படத்தின் பாடல்கள் வெளியானவுடன் அந்த கேசட்டை வாங்க ஆர்வமாக இருப்போம் அந்த கேசிட்டின் விலை 10ரூபாய் முதல் 15 ரூபாய் வரை இருக்கும். 10ரூபாய் நமக்கு கிடைப்பது எளிதான காரியமல்ல. கஷ்டப்பட்டு அந்த 10 ரூபாயை சிறிது சிறிதாக சேமித்து மியூசிக்கல் கடைக்கு சென்று அதனை வாங்கி கேட்டு மகிழ்வோம். இன்று பென்ட்ரைவில் பலமுறை அதில் இருக்கும் பாடல்களை அழித்து நமக்கு தேவையான பாடல்களை பதிவேற்றம் செய்துகொள்ள முடியும். இதை அன்றே ஆடியோ கேசட் மூலம் செய்துள்ளோம். ஆம் பாடல் ஒரிஜினல் கேசட் என்றும் டூப்ளிகேட் கேசட் எனவும் பிரித்து வைத்திருப்பார்கள். அதாவது ஒரிஜினல் கேசட்டில் இருந்து காலியான கேசட்டில் பதிவு செய்து கம்மி விலைக்கு விற்பார்கள். மியூசிக்கல் ரெகார்டிங் கடையில் இதற்காக அலைந்தது பல நாளாகும். ஒரு காலியான கேசட் வாங்கி அதில் நமக்கு பிடித்தமான பாடல்களை காகிதத்தில் எழுதி கொடுத்தால் 2 முதல் 3 நாட்களுக்கு பிறகு வரச் சொல்வார்கள்.
பாடல்களை பதிவு செய்ய
மியூசிக்கல் ரெகார்டிங்
கடைக்கு அலைந்த
நாட்கள் அதிகம்!
நாம் கேட்ட பாடல்களை பதிந்து அவர்களிடம் வாங்கி வீட்டிற்கு சென்று டேப்ரிகார்டரில் பாடலை கேட்கும் சுகம் அடடா.! அந்த பாடல்களின் வரிசையை ஒரு காகிதத்தில் எழுத்தி கேசட் பெட்டிக்குள் போட்டு வைப்போம். இன்று இந்த பாடல் வேண்டாம் என்றால் ஒரு நொடியில் மாற்றி விட முடியும் ஆனால் அன்று அப்படி இல்லை பார்வேர்ட் என்ற ஒரு பட்டனை அழுத்தி அடுத்த பாடல் வரவரைக்கு காத்திருக்க வேண்டும் அதிலும் அதிகமாக பார்வேர்ட் அடுத்த பாடலில் பாதி சென்று விடும் மீண்டும் ரிவர்ஸ் செய்து கேட்க வேண்டும். அந்த பாடல்களை டேப் ரிகாடில் வீடே அலற விட்டு கேட்டது ஒரு அலாதி இன்பம்.