Entertainment

களைகட்டிய பொன்னியின் செல்வன்- 2 விழா!

Published

on

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது . இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சினிமா பிரபலங்கள், மூத்த நடிகர், நடிகைகள், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் என ஒட்டு மொத்த திரை நட்சத்திர்டங்களும் கலந்து கொண்டு இந்த விழாவை திருவிழாவாக மாற்றி அமைத்தனர்.

இந்த சிறப்பான தருணத்தில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் துரைமுருகன், நடிகர் சிம்பு, நடிகர் கமல்ஹாசன், நடிகை குஷ்பு, ரேவதி, ஷோபனா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர்.பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவும் பாரதி பாஸ்கரும் மேடையேறி பொன்னியின் செல்வனில் அதிகம் தெரிவது காதலா, வீரமா என குட்டி பட்டிமன்றத்தை நிகழ்த்தினர் அனைவரையும் ரசிக்க வைத்தனர்.

சுஹாசினி பேசும் போது , “மணிரத்னம் மிகவும் ரொமான்டிக்கான நபர். அவருடைய பர்மனனெட் ஹீரோயின் நான். அவரது படத்தில் வருவது போன்று அவரது வாழ்விலும் உள்ளது. நாயகன் எனக்கு மிகவும் பிடித்த படம் . அதற்கு பின் தற்போது பொன்னியின் செல்வன் தான் பிடிக்கும்” என்றார்.

விழாவில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவில் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் படிக்கின்ற காலத்தில் பலமுறை படித்திருக்கிறேன்.

இக்கதையை படமாக்குவதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். அரைமனதாக ஒப்புக்கொண்டேன். இயக்குனர் யார் என்று கேட்டேன். மணிரத்னம் என்றார். மணிரத்னம் இக்கதைக்கு ஒத்துவரமாட்டார் என்றேன். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் என்று வேண்டாம் என்றேன். ஆனால் படத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். வீட்டில் இருந்தே சல்யூட் வைத்தேன். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். எனது தொகுதிக்குட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர். அதனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி. கமல்ஹாசனுக்கு கருணாநிதி கலைஞானி என பெயரிட்டார். அவருக்கு இணையானவர் திரையுலகில் இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இல்லை. எனது பேச்சைக் கேட்காமல் இப்படத்தை எடுத்து வெற்றி கண்ட சுபாஷ்கரனுக்கு வாழ்த்துகள். என தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிம்பு, பேசுகையில் “எனது குரு மணிரத்னம், கமல்ஹாசன் இங்கு இருக்கிறார்கள். பதட்டமாக உள்ளது. நான் கடினமான காலகட்டத்தில் இருக்கும்போது என்னை நம்பி படம் கொடுத்தவர் மணிரத்னம். என்னை பொறுத்தவரை மணிரத்னம் சின்ன குழந்தை. ஒரு விஷயம் வேண்டுமென்றால் விடாமல் முயற்சி பண்ணி முடித்துவிடுவார். இதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். தற்போது நான் காலையில் படப்பிடிப்புக்கு எழுந்து போகிறேன் என்றால் அதற்கு மணிரத்னம் தான் காரணம். சுபாஸ்கரன் நல்ல மனிதர். ஏ.ஆர். ரகுமான் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. பத்து தல படம் நேற்றுதான் பார்த்தேன். பிண்ணியெடுத்துவிட்டார். அவர் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருக்கிறார். விக்ரம் தங்கலான் படத்தில் சூப்பராக பண்ணியிருக்கிறார். மற்றவர்கள் கதாபாத்திரமும் இரண்டாம் பாகத்தில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது.

இன்னும் இரண்டு பாகங்கள் எடுங்கள் நான் பார்ப்பேன். நாளைக்கு பத்து தல ரிலீஸ் என்பதால் பதற்றமாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன். குந்தவையா நந்தினியா என்ற கேள்விக்கு இரண்டு கண்களில் எந்த கண்ணு என்று கேட்டால் எப்படி. எந்த கண்ணை மூடவேண்டும் என்று நான் பாத்துக்கறேன்” என்றார்.

விக்ரம் உடன் நடிப்பது பெருமை – ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய், “வணக்கம். இங்கு வந்திருக்கிறது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் எல்லோருக்கும் நன்றி” என்று தமிழில் பேசினார். “இப்படத்தை வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்களாகிய உங்களுக்கு நன்றி. நந்தினியாக முதல் முதலில் கேமரா முன் நின்றதில் இருந்து இப்போது வரை நான் உங்களது மாணவி என்பதை ஞாபகப்படுத்துகிறேன். நந்தினி அற்புதமான கதாபாத்திரம். இசை கலைஞர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய கைதட்டல் கொடுக்க வேண்டும் இவ்வளவு நேரம் நம்மை சந்தோஷப்படுத்தியதற்கு. விக்ரம் உடன் நடிப்பது பெருமை” என்றார்.

நான் காதல் செய்து இரண்டு திருமணம் செய்தவன் – சரத்குமார்

நடிகர் சரத்குமார், “பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெற்றிபெற வைத்த ரசிகர்களுக்கு நன்றி. எனக்கு முதல் காட்சியே ஐஸ்வர்யா ராய் உடன். அதுவும் காதல் காட்சி. எனக்கு காதல் வராது. ஐஸ்வர்யா ராய் உலக அழகி அவரது கையை பிடித்து எப்படி பேசுறது என்று தயக்கம் எனக்கு. நான் காதல் செய்து இரண்டு திருமணம் செய்தவன். என்னைப்பார்த்து உனக்கு ரொமான்ஸ் பண்ண தெரியுமா என்றார். உலக அழகியை கட்டிப்பிடிக்கும் வாய்ப்பை மணிரத்னம் கொடுத்தார் அவருக்கு நன்றி. இதை 5 பாகமாக எடுத்து இருக்கலாம். பெரிய பழுவேட்டரையர் காதலை சொல்லியிருக்கலாம். இப்பாகத்தையும் மிகப் பெரிய வெற்றி படமாக்குங்கள்” என்றார்.

மணிரத்னத்தை பார்த்து பொறாமை – கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன், “சின்ன வயதில் இருந்து என்னை இந்த மேடையில் நிறுத்தி வைத்துள்ள தமிழ் மக்களுக்கு நன்றி. அதன் உணர்வை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று தம்பி சிம்புவிற்கு தெரியும். இது தொழில் அல்ல கடமை. சந்தோஷமாக இருக்கிறேன் அதற்கு சம்பளமும் தருகிறார்கள். சிறந்த கலைஞர்களுடன் பணியாற்றிய வாய்ப்பு கிடைத்துள்ளது. சிலது கைவிட்டும்போனது. இந்த படம்போன்று. மணிரத்னத்தை பார்த்து பொறாமை கொள்ளும் நபரில் நானும் ஒருவன். முதலாமானவர் பாரதிராஜா.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்பதை இப்படத்தில் மீண்டும் நம்மிடம் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். இதில் யாராவது சொதப்பினாலும் கனவு கலைந்துவிடும். இது சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம். இதனை தூக்கிப்பிடிக்க வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் இவர்களுக்கு வாழ்த்து சொல்கின்றேன். இன்னும் பல வெற்றி மேடைகள் மணிரத்னத்திற்கு காத்துக்கொண்டு உள்ளது. அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு உள்ளது.

இதுபோன்ற வரலாற்று படம் எடுக்க முடியாது என்ற பயம் எல்லோருக்குமே உண்டு. மணிரத்னத்திற்கும் அந்த பயம் இருந்திருக்கும். ஆனால் வீரம்னா என்னனு தெரியுமா பயம் இல்லாதது போன்று நடிப்பது. நானும் மணிரத்னமும் இணையும் படம் பற்றி இப்போது பேச வேண்டாம். இது பொன்னியின் செல்வன் 2க்கான மேடை” எனப் பேசினார்.

Click to comment

Trending

Exit mobile version