தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (93). வயது மூப்பு காரணமாக காலமானார் இலக்கியவாதியான இவர் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமரி அனந்தனின் உயிர் பிரிந்தது.குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக இருந்த குமரி அனந்தன் பெருந் தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர்.
5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை நாகர்கோவில் தொகுதி எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். சட்டசபை இன்று (ஏப்.9)கூடியவுடன் அவையில் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இந் நிலையில் மறைந்த குமரி அனந்தனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அவரது பெருவாழ்வை போற்றிடும் வகையில் அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளார்.